Tuesday, June 26, 2007

மணி Proposes பத்மினி Disposes

மச்சி, PVRCinmeas site open ஆகுதா ?? தலைவர் படத்துக்கு டிக்கெட் book பண்ணனும்டா.
நம்மள மாதிரி 1000 பேரு try பண்ணுவாங்கடா..slow-வா தான் இருக்கும்.
ஹேய்ய்ய்..book பண்ணிடோம்ல book பண்ணிடோம்ல..
பேப்பர வீசி, விசில் அடிச்சு, படம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு..
மச்சி, சனிக்கிழமை போறோம், பட்டைய கிளப்புறோம்.. Bangalore-ஏ சும்மா அதிரணும்.
கண்டிப்பா மச்சி.
[இதுல முதல்ல மச்சின்னு கூப்பிட்டது சுரேஷ், கடைசியா மச்சின்னு சொன்னது மணி ரெண்டு பேரும் ஒரே ஊரு, ஒரே கம்பெனியில் Software Engineer-a குப்பை கொட்றாங்க]

மணி, தலைவர் தலைவர் தான். சான்ஸே இல்ல,அதுவும் மொட்டை பாஸ் ultimate.
சரி எங்க சாப்பிடலாம், PIZZA HUT போலாமா?
டேய் மணி, உன்கிட்ட தான்டா பேசுறேன்...அங்க எந்த பிகர பாத்துக்கிட்டு இருக்க?
அங்க பாரு மச்சி, நம்ம QA team பத்மினி..யாரோடயோ போறா..
ஆஹா மச்சி..உன் காதலுக்கு வில்லன் வந்துட்டானா ?
காதலும் இல்ல ஒரு கண்றாவியும் இல்ல..
டேய், எங்ககிட்டயே வா.. அப்போ எதுக்கு daily lunch அவ போற நேரத்துக்கே போற? அவ எப்ப cafeteria போனாலும், நீ அங்க இருக்க?

தப்பு மச்சி..நம்ம போற நேரத்துக்கு தான் அவ வர்றா..
நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.. டேய் நம்ம மூஞ்சிய எல்லாம், நம்மலாலயே கண்ணாடில பாக்க முடியாது..இதுல இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல,வா போய் சாப்பிடலாம்..

சுரேஷ் சொல்லவதும் உண்மை தான்.மணிக்கு பத்மினி மேல் ஒரு ஈர்ப்பு. மணிக்கு இந்த மாதிரி நெறைய பேரிடம் ஈர்ப்பு உண்டு. தற்சமயம் அது பத்மினி மீது ஒரு [தலை,கை, கால்] காதலாக மாறிவிட்டது. பத்மினிக்கு இப்படி ஒரு ஜீவன் இருப்பதே தெரியாது. ஏன்னா,
மணிக்கு கூச்ச சுபாவம் பொண்ணுங்கள பார்த்தாலே வெட்கம் வந்துடும். அதனால சைட் அடிக்கும் போது கூட தள்ளி நின்னு தான் சைட் அடிப்பான்.காலம் இப்படியே போச்சு [எப்படியே ன்னு எல்லாம் கேள்வி கேக்க கூடாது]

ஒரு Valentines Day அன்னைக்கி, மணியும் சுரேஷும் ஒரு ஹோட்டல்க்கு போறாங்க, அங்க ஒரு டேபிள்ல பத்மினி தனியா உக்கந்திருக்கா.மணிக்கு அவள பார்த்த உடனே ஒரே குதூகலம்.

மச்சி, அவ இருக்காடா
இருக்கட்டும், இப்ப என்ன பண்ணனும் ?

நான் அவ கிட்ட பேசணும்டா
சரி போய் பேசு,இதுக்கு என்ன நல்ல நேரம் ராகு காலமா பாத்துக்கிட்டு இருக்க முடியும்.

சும்மா இல்ல மச்சி, இன்னைக்கி Valentines Day, என் மனசுல இருக்கிறத அவ கிட்ட சொல்ல போறேன்.
என்ன கிண்டலா ? நீ யாருன்னே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மட்டும் இல்ல, இப்ப அவ கத்தி கூச்சல் போட்டு கூட்டம் சேந்துச்சினா,எனக்கும் நீ யாருன்னே தெரியாது.
நீ என்ன வேணும்னாலும் சொல்லு..நான் போய் சொல்ல தான் போறேன்

[மணி பத்மினி அருகில் செல்கிறான். சுரேஷ் என்ன நடக்குமோ என்று பார்க்கிறான். மணி சென்றவுடன் பத்மினி அவனிடம் ஏதோ சொல்கிறாள்..மணி திரும்பி வருகிறான்]

டேய் என்னடா சொன்னா ?
ஒண்ணும் சொல்லலை
பொய் சொல்லாதடா..நான் இங்க இருந்து எல்லாத்தையும் பார்த்தேன், அவ ஏதோ சொன்னா.
சொல்லு, என்ன சொன்னா ?

இந்த plates-a எல்லாம் Dispose பண்ணுங்கன்னு சொன்னா :(

Sunday, June 17, 2007

நீ வருவாய் என - V

பகுதி I
பகுதி II பகுதி III பகுதி IV

இரவின் தூக்கமின்மை ரவியின் கண்களில் தெரிந்தது. வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.சுஜியை அவன் இப்போது இங்கு எதிர் பார்க்கவில்லை. அவள் முகத்தைப் பார்க்க கூட அவனால் முடியவில்லை. ரவி ஏன் அப்படி செய்தான் என்று அவளுக்கும் புரியவில்லை. அவனாக பேசட்டும் என்று அவள் அமைதியாக இருந்தாள். இருவரின் மௌனத்தால், அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது. நல்ல நட்புகளுக்கும், காதல்களுக்கும் இடையே உள்ள மௌனம் அழகாக இருக்கும். ஆனால் அங்கு நிலவிய மௌனத்தை இருவராலும் ரசிக்க முடியவில்லை சுஜியே மௌனத்தைக் கலைத்தாள்

சுஜி: என்னாச்சு ரவி ? ஏன் திடீர்னு கிளம்பி வந்துட்ட ? உனக்கு ரமேஷ பிடிக்கலையா ? இல்ல நான் love பண்றது பிடிக்கலையா ? ஏதாவது பேசு ரவி. இப்படியே பேசாம இருக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல.
[அவள் முகத்தைப் பார்க்காமல், திரும்பி நின்றபடியே பேச ஆரம்பித்தான்]
ரவி: என்னால இப்ப எதுவும் பேச முடியாது
சுஜி: உன்னைய பாத்தாலே தெரியுது, ராத்திரி எல்லாம் தூங்கலைன்னு. என்ன பிரச்னை உனக்கு? ஒண்ணும் இல்லன்னு மட்டும் சொல்லாத.
ரவி: எனக்கு நிஜமாவே தெரியல சுஜி, எப்ப இருந்து எனக்கு உன்மேல...[வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்து வெளிவர மறுத்தன] நான் இது வரைக்கும் அப்படி எல்லாம் நினைச்தசதே இல்ல. ஆனா நேத்து நீ கோவில்ல சொன்னவுடனே, எனக்கு என்ன சொல்லணு தெரியல.
சுஜி: நான் உன்னைய அப்படி நினைக்கலையே ரவி. கடைசி வரைக்கும் எனக்கு ஒரு நல்ல frienda தான் இருக்கணும்னு நினைச்சேன். என்னால உன்னைய அப்படி நினைக்க முடியல ரவி. எனக்கு உன் மேல அப்படி ஒரு நினைப்பே வந்தது இல்ல. எங்க அம்மா, அப்பா மாதிரி தான் ரவி நீயும் எனக்கு. கடைசி வரைக்கும் ஒரு நல்ல நண்பனா மட்டுமே தான் என்னால உன்னைய பாக்க முடியும். என்னால உன்னைய வேற எந்த உறவோடையும் கற்பனை கூட பண்ணி பாக்க முடியல. நீ என் காதலன் சொல்றத விட நீ என் நண்பன் சொல்றதுல தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. இதை எல்லாம் மறந்துட்டு, திரும்ப பழைய மாதிரியே ஒரு நல்ல frienda இரு ரவி, ப்ளீஸ்.
ரவி: எல்லாத்தையும் மறக்கணும்னு தான் நினைக்கிறேன், என்னால முடியல சுஜி. மனசுக்குள்ள இப்படி ஒரு என்ணத்தை வச்சுக்கிட்டு உன்கிட்ட ஒரு நல்ல frienda பழக முடியும்னு எனக்கு தோணலை
சுஜி: இப்படி எல்லாம் பேசாத ரவி. எனக்கு கஷ்டமா இருக்கு. உன்னால முடியும் ரவி. நாம பழைய மாதிரியே இருக்கலாம்.
ரவி: இல்ல சுஜி. என்னால, உன் முன்னாடி நடிக்க முடியாது.நான் உன்கூட இருக்குற வரைக்கும் உனக்கும் கஷ்டம்,எனக்கும் கஷ்டம்.
சுஜி: எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. நீ இப்படி பேசுறது தான் கஷ்டமா இருக்கு. நான் எப்பவும் மாதிரி தான் ரவி இருப்பேன். என்னால உனக்கு ஒரு கஷ்டமும் வராது.
ரவி: உனக்கு ஒரு நல்ல frienda மட்டும் இருக்க முடியும்னு எனக்கு தோணலை சுஜி. இனிமேல் என்னைய பாக்க வராத என்னால முன்னாடி மாதிரி உன்கூட பேசவோ பழாகவோ முடியாது.
சுஜி: நான் என்ன ரவி தப்பு பண்ணினேன் ? எனக்கு ஏன் தண்டனை கொடுக்குற. நீ இப்ப நல்ல மூட்ல இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சு பாரு. நம்ம friendship வேண்டாம்ன்ணு மட்டும் சொல்லிடாத.
ரவி: நான் யோசிச்சிட்டுத் தான் சொல்லிறேன். இது ரெண்டு பேருக்கும் கஷ்டம். வேண்டாம்.
[சுஜி எவ்வளவோ முயற்சித்தும், ரவியின் மனத்தை அவளால் மாற்ற முடியவில்லை அன்றிலிருந்து அவன் அவளின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டான் இன்று இருவரும் ஒரே அலுவலகத்திலும் முற்றிலுமாக தவிர்த்து வருகிறான். சுஜியின் நினைவுகள் கலைகின்றன..மறு நாள் ]
ஷீலா: சுஜி, ரவி resign பண்ணிட்டானம். ஏன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ? எங்க போறன்ணு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ?
சுஜி: ஓ..அப்படியா ??
[ரவி அவளிடம் இறுதி வரை பேசவில்லை. ரவி அந்த அலுவலகத்தை விட்டுச்சென்ற மறுநாள், சுஜிக்கு அவனிடமிருந்து வந்த மின்னஞ்சல்]

சுஜி,
உன்னைய hurt பண்ணினதுக்கு மன்னிச்சுடு. என்னால உன்னைய மறக்க முடியல. என்னைய விரும்புன்னு உன்னைய எப்படி நான் கட்டாயப்படுத்த முடியாதோ, அதே மாதிரி தான் என்னாலயையும் என் மனச கட்டாயப்படுத்த முடியல உன்னைய மறக்குறதுக்கு. நாம பக்கத்துல இருக்குற வரைக்கும், இது மாறப்போறது இல்ல. அதான் கொஞ்சம் விலகி போறேன்.

அன்புடன்,
ரவி.

முற்றும்.

Thursday, June 14, 2007

நீ வருவாய் என - IV



பகுதி I பகுதி II பகுதி III

சுஜி: ரவி, என்ன பண்ணுற ?
ரவி: ஆபீசில என்ன ஆடு, மாடா மேய்ப்பாங்க ? வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.
சுஜி: சரி பாத்த வரைக்கும் போதும், உங்க ஆபீஸ் Reception-க்கு வா.
ரவி: யேய், இங்கயா இருக்க ? இரு வர்றேன்.
[ஆபீசிற்கு வெளியே இருவரும் சந்திக்கின்றனர்]
ரவி: இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
சுஜி: உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா?
ரவி: என்ன ?
சுஜி: நேத்து உங்க ஆபீசில இருந்து எனக்கு Interview call வந்தது உனக்கு surprise-அ இருக்கட்டுமேன்ணு தான் உன்கிட்ட சொல்லாம வந்தேன்.
ரவி: எப்ப forward பண்ணின ? இன்னைக்கா Interview?
சுஜி: ஏதோ ஒரு job site-ல இருந்து என்னோட Resume எடுத்துருப்பாங்க போல..Interview இப்பத்தான் முடிஞ்சது,நல்லா பண்ணிருக்கேன்.
ரவி: ஓ..குட் கலக்குற..
சுஜி: சரி இன்னைக்கி ஈவினிங் ராகிகுடா கோவில்க்கு வா, உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும். சரியா ?? நான் இப்ப கிளம்பறேன், bye.
ரவி: சரி வா, உன்னைய drop பண்ணிட்டு நான் ஆபிஸ்க்கு வர்றேன்.
[மாலை ரவி கோவிலுக்குள் நுழைகிறான்..சுஜி அவனை நோக்கி வருகிறாள்.]
சுஜி: ஏண்டா முக்கியமான விஷயம்ன்னு சொன்னேன்ல, இவ்வளவு லேட்டா வர்ற ?
ரவி: haloo madam, ஈவினிங் Bangalore trafficல வண்டி ஒட்டி பாக்கணும், சும்மா இங்க உக்காந்துகிட்டு பேச கூடாது.
சுஜி: சரி சண்டைய ஆரம்பிக்காத, வா என்னோட..
சுஜி: ரவி, இது ரமேஷ், என்னோட ஆபீசில வொர்க் பண்றாரு..
ரமேஷ்: ஹாய் ரவி
ரவி: ஹாய் ரமேஷ்
[அப்பொழுது ரமேஷின் அலை பேசி, அழைக்கிறது, ரமேஷ் சற்று தள்ளி சென்றவுடன்]
சுஜி: ரவி, ஆள் எப்படி ?
ரவி: ம்ம்...நல்ல இருக்காரு..ஏன் ?
சுஜி: உன்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு கோபப்படாத. முதல்ல friend-அ தான் பழகினோம், அப்றம் அவர் சொன்னாரு, நான் கொஞ்ச நாள் யோசிச்சேன், அப்றம் இன்னைக்கி காலைல சரின்னு சொல்லிட்டேன்..முதல்ல உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு, அதான் உன்னைய வர சொன்னேன்.

ரவி இதை எதிர் பார்க்கவில்லை. உடம்பில் ஒரு உறுப்பை இழந்தது போன்ற ஒரு வலி அவன் மனதில். காரணம் புரியவில்லை, கண்கள் கலங்கின, கால்கள் நடுங்கின. ஒன்றுமே தோன்றாமல் திரும்பி நடந்தான். சுஜி கூப்பிட்டதையும் பொருட்படுத்தாமல் திரும்பிச் சென்றான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பது இன்னும் ஆச்சரியம் தான். அலைபேசியை அணைத்து வைத்தான். கண்களை மூடினால், கண்ணீர் கசிந்தது. அவளை இன்று மாலை வரை தோழியாக தானே நினைத்தேன், எனக்குள் ஏன் இந்த சோகம், வலி கண்ணீர் எல்லாம். என்னையும் அறியாமல் என் மனத்தை அவள் எப்படி ஈர்த்தாள்.
அரனுக்காக இல்லாமல் அவளுக்காக அந்த ராத்திரியை சிவராத்திரி ஆக்கினான். தினமும் இனிமையாக விடியும் அந்த காலை பொழுது, அன்று அவனுக்கு கசப்பாக தோன்றியது. இரவின் தூக்கமின்மை கண்களில் தெரிந்தது, வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.

தொடரும் ...
பகுதி V

Sunday, June 10, 2007

சீனி கம் [Cheeni Kum]

Delhi வந்து ஒரு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு ஹிந்தி படம் கூட பார்க்கலைன்னா எப்படி?? சரி அப்படின்னு நானும், என்னோட friend ஒருத்தரும் படத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணினோம். எங்க வீட்டுப் பக்கத்துல 4 நாளைக்கு முன்னாடி தான் ஒரு Multiplex open பண்ணி இருந்தாங்க. வெள்ளிக்கிழமை நைட் 10:45 show போனோம். என்ன, என்ன படம் ஓடுது, அப்படின்னு பாத்துக்கிட்டே வந்தோம். என் friend சொன்னாரு, 'சீனி கம்'ன்னு ஒரு படம் review நல்லா போட்டிருந்தாங்கான்ணு சொன்னாரு. O.K. அந்த படத்துக்கே போகலாம்னு டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனோம்.

Theater-க்கு வெளில 3 ஜீப்ல போலீஸ்!!!, என்னடா இது theatre-க்கு யாராவது Bomb வச்சுடாங்களாண்ணு, நாங்க யோசிச்சிகிட்டு உக்காந்திருந்தோம். முந்தின show முடிஞ்சு எல்லாரும் EXIT வழியா வெளில போனாங்க, கொஞ்ச நேரம் கழிச்சு, யாரோ ENTRY வழியா வெளில போனாங்க, யாருன்னு பாத்தா, Delhi Cheif Minister, Sheela Dixit. ஒரு விஷயத்துக்கு அவங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகணும், ஒரு CM நினைச்சா தனியா ஒரு preview theatre-ல போய் special show பாக்கலாம், இல்ல theatre-ல தான் பார்க்கணும்னா, Gold Class-ல உக்காந்து பார்க்கலாம், ஆனா normal டிக்கெட்-ல எல்லாரோடையும் உக்காந்து படம் பார்க்கிறது எல்லாம், நம்ம ஊருல நினைச்சு பார்க்க முடியுமா ??? O.k. coming to the point.

இந்த பதிவுல நான் படத்தோட கதை சொல்ல போறது இல்லைன்னு நினைச்சு தான் எழுத ஆரம்பிச்சேன், ஆனா கதை சொல்லாம எப்படி படத்த பத்தி எழுதறது ? அதனால படம் பாக்றதுக்கு முன்னாடி கதையோ விமர்சனமோ படிக்கிறது இல்லைன்னு இருக்குறவங்க, இத படிக்க வேண்டாம்ன்ணு கேட்டுக்கிறேன்.

கதை என்னமோ கிட்டதட்ட முதல் மரியாதை கதை மாதிரி தான் [similar not same]. அமிதாப் London-ல ஒரு இந்தியன் Restaurant வச்சிருக்கார், அவரோட style-ல சொல்லணும்னா, [An Authentic Indian Restaurant]. அவர் தான் chef + owner. தபு ஒரு தடவை அந்த hotel-க்கு சாப்பிட வர்றாங்க, அவங்க ஆர்டர் பண்ணின ஹைதாராபாதி புலாவ, ஸ்வீட்டா இருக்குன்னு சொல்லி reject பண்ணிறாங்க. அமிதாப் ரொம்ப டென்ஷன் ஆகி, தபுவ பாத்து வாழ்க்கையில எப்பவாது இந்த புலாவ சாப்பிட்டு இருக்கீங்களான்னு, கேட்டு காய்ச்சி எடுக்குறார். அடுத்த நாள் தபு ஹைதாராபாதி புலாவ செஞ்சு அனுப்புறாங்க.
அமிதாப்க்கு எங்க தப்பு நடந்திருக்குன்னு தெரியுது, தபு கிட்ட sorry கேக்கிறததுக்கு போறார். இப்படியே ஸ்டார்ட் ஆகி, ரெண்டு பேருக்கும் காதல் வந்துடுது..தபு அவங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்க சொல்லுறாங்க..அங்க போனா தபுவோட அப்பா அமிதாப்ப விட 6 வயசு சின்னவர்.. so, அமிதாப் பொண்ணு கேட்டாரா ? அவங்க அப்பா ஒத்துக்கிட்டார ?? வெள்ளித் திரையில் காண்க.
கனமான கதைக் கரு, ஆனாலும் படம் முழுவதிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை பின்னணி தொடர்வது ரசிக்கும்படி இருக்கிறது. பாட்டு எல்லாமே நம்ம பழைய பாட்டோட re-mix தான், ஏன்னா இசை நம்ம இளையராஜா. மௌன ராகம் படத்தோட பின்னணி இசையை அப்படியே use பண்ணி இருக்கார். "சீனி கம்" பாட்டு நல்லா இருக்கு.

Sunday, June 03, 2007

நீ வருவாய் என - III

பகுதி I
பகுதி II
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த நினைவுகள்...
ஒரு அழகிய குளுமையான காலைப் பொழுது, சுஜி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இன்று ஒரு MNCயில், அவளுக்கு இறுதிச் சுற்று, ஏற்கனவே 5 தகுதிச் சுற்றுகள் முடிந்து விட்டன. ஐந்திலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள் வெகு சிலர் தான். எப்படியும் தனக்கு அந்த வேலை கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் நேர்முகத்திற்க்கு சென்றாள். வந்திருந்த அனைவருமே ஒருவரை ஒருவர், ஏதோ ஒரு தகுதி சுற்றில் சந்தித்திருந்தனர், அப்படித்தான் ரவியையும் அவள் சந்தித்தாள். சந்தித்திருந்தாலும் இருவரும் பேசிக்கொண்டது இல்லை. எதேச்சையாக ரவியின் Bio-Data அவள் கண்ணில் பட்டது. ரவியும் அவளுடைய ஊரைச் சேர்ந்தவன் தான் என்பதைக் கண்டவுடன் ஏதோ ஒரு மகிழ்ச்சி அவள் மனத்தில். உடனே சென்று ரவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இருவருமே நேர்-காணலை சிறப்பாக செய்தனர். இறுதிச் சுற்று முடிந்து அன்றே offer letter தருவதாக சொன்னதால், இருவரும் மாலை வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

சுஜி: ரவி, offer letter கிடைச்ச உடனே ஜாயின் பண்ணீடுவீங்களா ?
ரவி: இல்ல சுஜி, ஒரு 10 days டைம் கேப்பேன்
சுஜி: எதுக்கு ?
ரவி: என்னோட Dream Company ஒண்ணுல இன்னும் result சொல்லல, இன்னும் 1 வாரத்துல அதுக்கு result தெரிஞ்சிடும். அந்த offer வந்ததுன்னா, அதத்தான் choose பண்ணுவேன்.
சுஜி: ஓ! All the best
ரவி: Thanks. நீங்க இங்க தான் ஜாயின் பண்ணுவிங்களா ?
சுஜி: ஆமா ரவி, எனக்கு வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம்..offer வாங்கின அடுத்த நாளே ஜாயின் பண்ணிடுவேன்.
ரவி: ஹ்ம்ம்..
சுஜி: அடுத்து எப்ப ஊருக்குப் போறீங்க ?
ரவி: நம்ம் ஊரு பொங்கலுக்குப் போவேன். நீங்க ?
சுஜி: நானும் போகணும்..நீங்க டிக்கெட் போட்டுட்டீங்களா ?
ரவி: இல்ல, இனிமேல் தான்
சுஜி: நாம சேர்ந்து போலாமே, எனக்கும் சேர்த்து book பண்ணுறீங்களா? உங்களுக்கு ஒண்ணும் problem இல்லையே ?
ரவி: ம்..சரி no problem.

ரவி அவனின் கனவு நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தான், சுஜியுடனான அவனின் நட்பும் தொடர ஆரம்பித்தது. நீங்கள், நீ ஆனது. வார இறுதி சந்திப்பு மறைந்து, வாரம் முழுவதும் சந்திப்பு தொடர்ந்தது. வாழ்க்கைல புதுசா ஒரு உறவு வரும் போது எல்லாமே நல்லதாகவே நடக்கிற மாதிரி இருக்கும், மனசு எப்போதும் சந்தோஷமா இருக்கும். ரவியும் சுஜியும் அந்த பருவத்தில் தான் இருந்தனர். வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது.

ஆண்-பெண் நட்பில் சலனத்தின் பங்கு மிக முக்கியமானது. சலனம், அது இருவருக்குமே வராமல் இருக்கலாம் அல்லது இருவருக்குமே வரலாம், இந்த இரண்டிலும் அல்லது இந்த இரண்டினாலும் நட்புக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் இருவரில் ஒருவர்க்கு மட்டும் மற்றவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு சிறு சலனமோ, ஈர்ப்போ உருவாகிவிட்டால் அங்கே நட்போ காதலோ மறைய ஆரம்பித்து விடும்.



இந்த நிமிடம் வரை ரவிக்கும் சுஜிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு மட்டுமே இருந்து வருகிறது..இப்படியே இருந்திருந்தால், இந்தக் கதையை எழுத அவசியம் இருந்திருக்காது.. இந்த இருவரில் ஒருவர்க்கு மட்டும் அடுத்தவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு வித உணர்வு, மிக ரகசியமாய் வளர்கிறது.. யாருக்கு தோன்றியது ?? இவ்வளவு நாட்கள் தோன்றாத ஒரு விஷயம் இப்போது எப்படி தோன்றியது ?

தொடரும்...

பகுதி IV

Friday, June 01, 2007

நீ வருவாய் என - II

பகுதி I
சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??
சுஜாதா: என்னைய மறந்துட்டில ரவி.

[ரவி அவள் கண்களை பார்த்து மெல்ல சிரித்தான்.

ஆம்
மறந்து தான் போய் விட்டேன்
உன் விழியில் இந்த உலகத்தை
மறந்து தான் போய் விட்டேன்
உன் நினைவில் என் தனிமையை
மறந்து தான் போய் விட்டேன்
உன்னை மறக்க வேண்டும் என்ற மனஉறுதியை

]

சுஜாதா: ஏன் ரவி ஒண்ணுமே பேச மாட்டேங்கற?
[அப்போது ஷீலா திரும்பி வருகிறாள்]
ஷீலா: என்ன ரவி பேச மாட்டேங்கறானா? அவன் எப்பவுமே அப்படி தான். நாங்க இங்க சேர்ந்த நாள்ல இருந்து இவன் என்கிட்ட பேசியதை எல்லாம், ஒரு Bus டிக்கெட் பின்னாடி எழுதிடலாம். ஆனா செம brilliant, நம்ம TL க்கு இவன் தான் வலக்கை. டேய், என்ன முறைக்கிற ?? 'அள்ளக்கை'ன்னா சொன்னேன், வலக்கைன்னு தான சொன்னேன்.
ரவி: எனக்கு இப்ப ஒரு con-call இருக்கு..நாம அப்புறம் பேசலாம்.
ஷீலா: சுஜி, மதியம் லஞ்ச் தனியா சாப்பிட்டு இருந்தீங்க போல?? உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா, நாளைக்கு எங்களோட ஜாயின் பண்ணிக்கோக்கங்க.
சுஜி: தாங்க்ஸ் ஷீலா..கண்டிப்பா நாளைக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்.
(சில நாட்களுக்குப் பிறகு....)

ஷீலா: டேய், உண்மைய சொல்லு..உனக்கு சுஜிய, முன்னாடியே தெரியுமா ??
ரவி: தெரியாது ஏன் கேக்குற ?
ஷீலா: இல்ல இன்னைக்கி காலைல கோவிலுக்கு போயிருந்தேன். அப்போ அவ உன் பெயருக்கு அர்ச்சனை பண்ணினா. இன்னைக்கி உனக்கு பிறந்த நாள்ன்னு அவளுக்கு எப்படி தெரியும் ? நம்ம டீம்ல கூட என்னைய தவிர வேற யாருக்கும் தெரியாது.
ஞாபகம் இருக்கா? அன்னைக்கி உன்னோட PAN Card application fill பண்ணினப்போ தான் எனக்கே தெரியும், அப்போ நான் கேக்கும் போது தான் மற்ற details சொன்ன.
ரவி: ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருப்பாங்க.
ஷீலா: ஓ!!! அப்படீங்களா சார்...அப்புறம் அவளுக்கு எப்படி உன்னோட கோத்திரம்,நட்சத்திரம் எல்லாம் தெரியும் ? ஒரு வேளை, அவளுக்கு தெரிஞ்ச ரவிக்கும் உனக்கும் ஒரே நாள், ஒரே கோத்திரம், ஒரே நட்சத்திரமா இருக்கலாம் இல்லையா ? அதான் ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருக்காங்களே இல்லையா ரவி சார் ? அன்னைக்கு சாப்பிடும் போதும் பாத்தேன்...உன்னையவே பாத்துக்கிட்டு இருந்தா, கொஞ்ச நேரம் கழிச்சு, கண்ணை துடைச்சிக்கிட்டா..
ரவி: நீ உன் வேலைய பாக்க மாட்டியா? யார் என்ன பண்றாங்கன்ணு தான் பார்ப்பியா ? ஒரு வேளை அவளுக்கு கண்ல தூசு பட்டிருக்கும்.
ஷீலா: எனக்கு என்னமோ இன்னும் சந்தேகாமாவே தான் இருக்கு. சரி அதை விடு, என்னைய எங்க treat கூட்டிட்டு போற ?
ரவி: எங்க வேணும்னாலும் போகலாம், இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[ஷீலா செல்கிறாள், ரவியின் மனது அவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவனிடம் பதில்கள் இல்லை. சில தினங்களுக்கு முன்பு படித்த ஒரு கவிதை ஏனோ தேவை இல்லாமல், அவன் நினைவுக்கு வந்தது

என் பிறந்த நாளில்
நீ என் பெயரில் செய்த அர்ச்னையால்
எனக்கும் கடவுளுக்கும் சண்டை,
தினமும்
கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் நீ
இன்று என் பெயரில் செய்ததால்
கடவுளுக்கு என் மீது கோபம்
அவருடைய தேவதைகளில் ஒன்றை
நான் அபகரித்துவிட்டேன் என்று.



யாரோ வரும் சத்தம் கேட்டு அவன் நினைவுகள் கலைகின்றன.]

இடம்: Office Cafeteria
பாத்திரங்கள்: சுஜி, ஷீலா மற்றும் Bench மக்கள்
ஷீலா: உன்னைய இன்னைக்கி காலைல கோவில்ல பாத்தேன், சாமி கிட்ட ஏதோ application போட்டுக்கிட்டு இருந்த?
சுஜி: நான் தினமும் கோவிலுக்கு போவேன்
ஷீலா: ஓ! அப்படியா...சரி இந்த வீக்கெண்ட் ப்ளான் என்ன உனக்கு ?
சுஜி: பெருசா ஒண்ணும் இல்ல, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க வேண்டியது தான் நீ என்ன பண்ண போற ?
ஷீலா: ரவியோட வெளில போகலாம்னு இருக்கேன்.
சுஜி: ஓ!, சரி ஷீலா, எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு, நாம அப்புறம் மீட் பண்ணலாம்.

ரவி ஷீலாவை அழைத்துச் செல்கிறான் என்று கேட்டவுடன், ஏனோ சுஜியின் மனதில் ஒரு சிறிய வலி அவள் கண்கள் கலங்கின. ஏன் எங்கள் உறவில் இப்படி ஒரு விரிசல்? என்று அவள் மனம் யோசிக்க தொடங்கியது.
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த பொழுது....

தொடரும்.....
பகுதி III